கள்ளக்குறிச்சி கலவரம்.. மாணவர்கள் பெயரில் திட்டமிடப்பட்ட வன்முறை - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாணவர்கள் போராட்டம் என்ற போர்வையில் திட்டமிடப்பட்ட வன்முறை அரங்கேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி  கலவரம்.. மாணவர்கள் பெயரில் திட்டமிடப்பட்ட வன்முறை - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் நேற்று பெரும் கலவரம் வெடித்தது. சம்பந்தப்பட்ட பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது.

பள்ளி பேருந்துகள் மற்றும் வகுப்பறைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்தநிலையில், கலவரத்தால் சேதமடைந்த பள்ளியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். எரிக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் அலுவலக அறையை பார்வையிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, வெளியூரைச் சேர்ந்த பலரும் முன்னாள் மாணவர்கள் என்ற பெயரில் வன்முறை செய்துள்ளனர் என்றார்.   3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் நீதி கேட்கப் போனவர்கள் மாற்றுச் சான்றிதழ் மற்றும் பேருந்துகளை கொளுத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்  திட்டமிட்டு கலவரம் செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச்சூடு இல்லாமலேயே கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார். கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறியக் குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் வேலு தெரிவித்தார்.