தமிழர்களின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன கமலஹாசன்!

தமிழர்களின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன கமலஹாசன்!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக துவங்கியது. முதலமைச்சர் முக ஸ்டாலின் பட்டு வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர். முதலாவதாக மணல் ஓவியக் கலைஞர் சர்வம் படேலின் மணல் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தம்பி, மகாத்மா காந்தி, உலக உருண்டை உள்ளிட்ட பல்வேறு உருவங்களை அவர் மணல்  ஓவியத்தில் வரைந்து அசத்தினார்

இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 186 நாடுகளை சேர்ந்த 1755 வீரர்கள் தங்கள் நாட்டுக் கொடியுடன் அணிவகுத்தனர். அப்போது லேசர் ஒளியில் நாடுகளின் கொடிகள் ஒளிரவைக்கப்பட்டன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளூர் அளவிலான செஸ் போட்டிகளில் வென்ற 186 மாணவர்கள் வீரர்களை வழிநடத்தி சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் 8 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தமிழகத்தின் பரதம், கேரளாவின் கதகளி மற்றும் மோகினியாட்டம், ஒடிசாவின் ஒடியா நடனம் உள்ளிட்டவை பார்வையாளர்களின் கண்களுக்கு விருது படைத்தன.

இதனைதொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கு மேடையில் இளம் இசைக்கலைஞர் லிடியன் கண்ணை கட்டிக் கொண்டு பியானோ வாசித்து பார்வையாளர்களை மகிழ்வில் ஆழ்த்தினார்.

அதை தொடர்ந்து தமிழருடைய வரலாற்றை ஆவணப்படமாக காட்டும் விதமாக பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அரங்கில் சங்க காலம் தொடங்கி தற்போது வரை உள்ள வரலாறுகள் அடங்கிய காணொலி காட்சி ஒளிபரப்பபட்டது. தமிழருடைய வரலாற்றை காட்டும் ஆவணப்படத்துக்கு நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்திருந்தார். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வரலாறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஜல்லிக்கட்டு, சிலம்பம் அடங்கிய காணொலி வெளியிடப்பட்டது.

உலக நாயகன் கமலஹாசன் குரலில், தமிழர்களின் சிறப்பைக் கூறும் இந்த சிறப்பான ஆவணபடமானது, முதன் முதலில் வந்த தமிழ்ர்களின் கலாச்சராம் தொடங்கி, சேர சோழ, பாண்டிய, பல்லவர்கள் பற்றி பேசியது.

பின், லெமூரிய கண்டத்தில் இருந்து, தமிழகம் மேற்கொண்ட அனைத்து வகையான மேம்பாடுகள் வரை இந்த ஆவணப்படம் மிக அழகாக வெளிப்படுத்தியது. சென்னையில் வந்த சுனாமியில் இருந்து, சமீபத்திய வெள்ளம் வரை அனைத்து கடினங்களையும் எதிர்த்து வளர்ந்து வரும் தமிழகம், பெரிதாக முடங்கியது கொரோனா காலத்தில் தான். அதிலும் எப்படி அவர்கள் வெளிவந்தனர் என்பதனை இந்த ஆவணப்படம் மிக அழகாகக் காட்டியது.

தமிழர்களின் கட்டிடக்கலையை விளக்குகின்ற வகையில் தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில் காணொலியும், திருவள்ளுவர், பாரதியார் என தமிழகத்தின் வரலாறுகளையும், பெருமைகளையும் பறைசாற்றுகின்ற வகையில் காணொலி தொடக்க விழாவில்  அலங்கரித்தன.