54வது பட்டமளிப்பு விழாவில் தமிழில் உரையாற்றி காமராஜருக்கு புகழாரம் சூட்டினார் ஆளுநர் ரவி!

54வது பட்டமளிப்பு விழாவில் தமிழில் உரையாற்றி காமராஜருக்கு புகழாரம் சூட்டினார் ஆளுநர் ரவி!

தமிழகத்தில்  கல்வி கட்டமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை உருவாக்கியவர் காமராஜர் தான் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 54வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி புகழாரம் சூட்டினார்.

பட்டமளிப்பு விழாவில் தமிழில் உரையாற்றிய ஆளுநர் ரவி:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  54வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட  தமிழக ஆளுநர் ரவி,  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர், முதலில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த பட்டம் என்பது, மாணவர்களின் கடுமையான உறுதியாலும், முயற்சியாலும் கிடைத்தது. எனவே மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என தமிழில் உரையை தொடங்கினார்.

காமராஜரின் சாதனைகளை பட்டியலிட்ட ஆளுநர்:

தொடர்ந்து பேசிய ஆளுநர், காமராஜர் ஆட்சி காலத்தின் சாதனைகளை பட்டியலிட்டார்.  அதாவது காமராஜர்  சிறந்த தேசியவாதி என்றும்,  கிராமப் பகுதியில் இருந்து வந்து பாரத் ரத்னா பெரும் அளவுக்கு உயர்ந்தவர் திரு.காமராஜர், எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்பவர்  என்றும் குறிப்பிட்டார். முதன்முதலில் ஜாலியன் வாலபாக் படுகொலை சம்பவத்தை பார்த்து தான் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட துவங்கினார் காமராஜர். மேலும்  தமிழகத்தில்  கல்வி கட்டமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளை உருவாக்கியவர் காமராஜர் எனவும் ஆளுநர் புகழாரம் சூட்டினார்.

இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்க முயற்சித்த ஆங்கிலேயர்கள் :

பிரித்தாளும் கொள்கையை முதன் முதலில் கடைபிடித்தவர்களே ஆங்கிலேயர்கள் தான். வடஅமெரிக்காவை சிதைத்தது போல இந்தியாவை சிதைக்க ஆங்கிலேய ஆதிக்கம் திட்டமிட்டபோது அவர்களால் அதை சாதிக்க முடியவில்லை. ஏனென்றால் இந்தியா சீனாவை விட சமூக மற்றும் பொருளாதார அளவில் மேம்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி நம்முடைய இந்தியாவில் தான் கப்பல்களை எப்படி  waterproof செய்வது குறித்து கற்று கொண்டனர். மேலும் அவர்கள் சோழர்களின் கப்பல் பயன்பாட்டு முறை மூலம் தங்கள் கப்பல் கட்டுமானத்தில் முன்னேற்றம் அடைந்தனர். இந்த காரணங்களால் இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்க முயற்சி செய்த ஆங்கிலேயர்கள், தெற்கே இருந்தவர் திராவிடர் என்றும் வடக்கே இருந்தவர் ஆரியர் என்றும் பிரித்தாக ஆளுநர் ரவி கூறினார். இதனால் ஆங்கிலேயர்கள்  எவ்வாறு இந்திய வரலாற்றை மாற்றினார்கள் என்பதை மாணவர்கள் அனைவரும் தேடி தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

தனி நபரின் வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சியாக மாறும்:

தொடர்ந்து, தனி நபரின் வளர்ச்சி குறித்து பேசிய ஆளுநர் ரவி, இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டுகளில் வெறும் 400 தொழில் முனைவோர் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது 70,000 தொழில் முனைவோரை இந்தியா உருவாக்கி உள்ளது. எனவே, தனி நபரின் வளர்ச்சி தேசத்தில் வளர்ச்சியாக மாறும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும் என்றார்.

சுயதொழில் முனைவோராக மாறுவதற்கு ஆளுநர் கூறிய  மூன்று  முக்கியமான விஷயங்கள்:

அப்படி ஒருவேளை நீங்கள் சுயதொழில் முனைவோராக மாற விரும்பினால், அதற்கு மூன்று முக்கியமான விஷயங்கள் தேவை. முதலில் எப்படி ஒரு செயலை செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரியவேண்டும். இரண்டாவது தொழில் செய்ய நிதி முக்கியம், அது அரசின் நிதி ஆயுக், வங்கிகள் என எளிமையாக கிடைக்கிறது அதனை பயன்படுத்தி கொள்ளலாம். மூன்றாவது, அந்த திட்டத்தை செயல்படுத்தும் துணிவும், முயற்சியும் வேண்டும். இவை மூன்று இருந்தால் நீங்களும் சிறந்த தொழில் முனைவோராக மாற முடியும் அதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இவ்வாறு அவர் உரையாற்றினார்.