திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடக்கம்

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணியசாமி திருக்கோவில்  கந்தசஷ்டி திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாளை காலை யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடக்கம்

முருகப்பெருமானின்ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நாளை காலை  யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.  

கொரோனா  தடுப்பு நடவடிக்கை காரணமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக  கந்தசஷ்டி திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழாவில்

நவம்பர் 8-ம் தேதி வரை ஐந்து நாட்கள் மட்டும் நாளொன்றுக்கு பத்தாயிரம்  பக்தர்கள்  ஆன்லைன் மூலமாகவும்,  நேரடியாகவும் காலை 5-மணி முதல் இரவு 8-மணி வரை  தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம்  நவம்பர் 9 - ம் தேதி  நடைபெறுகிறது.

சூரசம்ஹாரம் மற்றும் ஏழாவது திருநாளில் நடைபெறும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் கலந்துகொள்ள  அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கந்தசஷ்டி  திருவிழாவில் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி விரதம் இருக்கவும் அங்கப்பிரதட்சணம்  செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருவிழா நாட்களில் பக்தர்கள் கடலில் புனித நீராடாவும் , கடற்கரை பகுதிக்கு செல்லவும்  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள்   காத்திருந்து தரிசனம் செய்வதற்காக  தற்காலிக காத்திருப்பு கொட்டகைகள்  அமைக்கப்பட்டுள்ளது.

கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு வருகின்ற 09-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கந்தசஷ்டி திருவிழா நடைபெறும் நாட்களில் சுமார் 1,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.