கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை வழக்கு.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு!!

கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர்நீதிமன்றம், இருவரை விடுதலை செய்துள்ளது.

கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை வழக்கு.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பு!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த, இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி - முருகேசன் ஆகியோர், கடந்த 2003-ல் ஆணவக் கொலை செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், 18 ஆண்டுள் கழித்து, கடந்தாண்டு தீர்ப்பு வழங்கிய கடலூர் நீதிமன்றம், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனையும், மேலும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கண்ணகியின் தந்தை துரைசாமி உள்ளிட்ட 10 பேருக்கான ஆயுள் தண்டணையை உறுதி செய்துள்ளது. மேலும், ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முருகேசன் தரப்பு வழக்கறிஞர் சுரேஷ், சாதி அடிப்படையில் தவறு செய்பவர்கள் மீது சட்டம் பாயும் என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டி உள்ளதாகக் கூறியதோடு, பிரச்சார வழியில் ஆணவக்கொலை மற்றும் சாதிய அடக்குமுறை இல்லாமல் இருக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.