விஜய் ஆண்டனி பாணியில் பிச்சைக்காரன்...

விஜய் ஆண்டனி பாணியில் பிச்சைக்காரன்...

கன்னியாகுமரி அருகே பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த பிச்சைக்கார ஆசாமியிடம் இருந்த ஒரு அடி நீளமுள்ள கத்தி மற்றும் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

கொரானா முழு ஊரடங்கு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையங்கள், பொது கட்டடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் ஏராளமானோர் தங்கியிருந்து பிச்சை எடுத்து வந்தனர். தற்போது ஊரடங்கு காலம் என்பதால்,உணவு கிடைக்காமல் தவிக்ககூடாது என்று இவர்களுக்கு 3 வேளை உணவுகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இவர்களை பராமரிக்க நினைத்த போலீஸ் ஆய்வாளர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த பிச்சைகாரர்களை மீட்டு  காப்பகத்திற்கு அழைத்து செல்ல முடிவெடுத்தனர். 

அப்போது அந்த பிச்சைகாரர்களில் ஒருவரிடம் ஒரு அடி நீள கத்தி இருந்தது தெரியவந்தது. உடனே அவரிடம் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் இரவில் கஞ்சா போதையில் பணம் பிடுங்க வரும் கும்பல்கள் மற்றும் தகராறில் ஈடுபட வரும் அடாவடிகளிடமிருந்து தப்பிப்பதற்காகவும் தற்காப்புக்காக கத்தி வைத்து உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் போலீசாரிடம் பிடிபட்ட மற்றோரு ஆசாமி, தான் பல வருடம் இங்கு தான் பிச்சை எடுத்து வருவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கருங்கல் பகுதியில் சொந்த வீடு கட்டி வாடகைக்கு விட்டிருப்பதாகவும், தினமும் ஆட்டோவில் வந்து பிச்சை எடுப்பதாகவும் கூறினார்.

பிடிபட்ட இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்க் கொள்ளப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் இதுவரை பிடிப்பட்ட 42 பேர் பராமரிக்கபட்டு காப்பகத்தில் உள்ளனர் என்றும் இவர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.