காவிரி வழக்கு ; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை! கர்நாடக அரசு பதில் மனு தாக்கல்!!

காவிரி வழக்கு ; உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை! கர்நாடக அரசு பதில் மனு தாக்கல்!!

காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதிவரை கர்நாடக அரசு 51 டி எம்.சி தண்ணீரை காவிரியில் திறந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 15 டி. எம்.சி. தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள 38 டி. எம்.சி. தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. அப்போது, வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி வீதம் இந்த மாதம் முழுவதும் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் மாதம் திறக்க வேண்டிய 36 புள்ளி 76 டி. எம்.சி நீரையும் தாமதமின்றி உரிய நேரத்தில் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க : MBBS, BDS படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்...!

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி சந்திரசூட், 21-ஆம் தேதி முறையிடுமாறு உத்தரவிட்டார். அதன்படி, தமிழ்நாடு அரசு இன்று முறையிடுகிறது. இதேபோல், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீது கர்நாடக அரசு பதில் அளிக்கிறது. 

இதனிடையே, காவிரியில் நீர் திறப்பது குறித்து விவாதிப்பதற்காக வருகிற 23-ம் தேதி முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.