"இந்தியாவின் பெயரை மாற்ற பல லட்சம் கோடி செலவாகும்" கார்த்தி சிதம்பரம் கருத்து!

"இந்தியாவின் பெயரை மாற்ற பல லட்சம் கோடி செலவாகும்" கார்த்தி சிதம்பரம் கருத்து!

இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றினால் பணத்தை திரும்ப அடிப்பது, பாஸ்போர்ட்டில் மாற்றம் செயவது உள்ளிட்டவற்றை செய்து முடிக்க பல லட்சம் கோடி செலவாகும் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சத்தியமூர்த்தி நூலகத்தின் புதிய கட்டட திறப்பு விழா நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், "நடைமுறையில் பேசும்போது பாரதம் என்று பயன்படுத்துகின்றோம், அந்த வகையில் இந்தியா பாரதம் என்பது பயன்படுத்தக்கூடிய பெயர்கள்தான். பாஜகவினர் பேச்சுவாக்கில் குறிப்பிடுவதற்காக சொல்லும்போது பாரதம் என்று பயன்படுத்தினார்கள் என்றால் எந்தவிதமான ஆட்சேபனமும் கிடையாது. 

நடைமுறையில் இரண்டு பெயர்களையும் பயன்படுத்துகின்றோம். ஆனால், அதிகாரப்பூர்வ பெயர் இந்தியா தான். அந்த அதிகாரப்பூர்வ பெயரை இந்த அரசாங்கம் மாற்ற நினைத்தால் பெரிய அசௌரியங்கள் செலவினங்களும் வரும். உதாரணத்திற்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்றுதான் உள்ளது. அதனை ரிசர்வ் பேங்க் ஆப் பாரதம் என்று மாற்றினால், அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வாபஸ் பெற்று விட்டு புதிய ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் புதிதாக அடிக்கும் நிலை ஏற்படும்.  அதேபோல் பாஸ்போர்ட்டில் ரிபப்ளிக் ஆப் இந்தியா என்று தான் உள்ளது. அதனை ரிபப்ளிக் ஆப் பாரத் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றினால் அனைத்து பாஸ்போர்டுகளையும் வாபஸ் பெற்று, புது பாஸ்போர்ட் கொடுக்க வேண்டும். நான் சொல்வது இந்த இரண்டு உதாரணம்தான். இது போல் 100 காரியங்கள் ஆயிரம் காரியங்கள் உள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதால் பெரிய அளவில் செலவினங்களும் அசௌரியங்களும் ஏற்படும். தொழில்நுட்ப அளவிலும் பாதிப்பு ஏற்படும். இதை அவர்கள் தவிர்க்க வேண்டும்" என தெரிவித்தார். 

"நாளைக்கு இந்தியா கூட்டணியின்  பெயரை பாரத் கூட்டணி என்று மாற்றிவிட்டால் இந்தியாவுக்கு இந்துஸ்தான் என்று பெயரை மாற்றி விடுவார்களா? இது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.  இவர்களது எண்ணமே சரித்திரத்தை திருப்பி எழுத வேண்டும் என்பது தான். அத்தகைய காரியங்களை செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறார்களே தவிர, ஆக்கபூர்வமான சாதாரண மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் பாஜக அரசுக்கு எந்த ஒரு எண்ணமும் கிடையாது" என தெரிவித்தார். 

இதையும் படிக்க:தாயை கவனிக்காத மகன்; சிறையில் அடைத்த கோட்டாட்சியர்; விடுதலை செய்த மாவட்ட ஆட்சியர்!