11 வது நாளாக தொடரும் ஆட்கொல்லி புலி தேடுதல் வேட்டை....இடம் விட்டு இடம்பெயரும் புலியால் வனத்துறை திணறல்...

நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்த நிலையில், அந்த புலி மீண்டும் வேறு இடத்திற்கு தப்பி சென்றுள்ளது. இதனால் ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.   

11 வது நாளாக தொடரும் ஆட்கொல்லி புலி தேடுதல் வேட்டை....இடம் விட்டு இடம்பெயரும் புலியால் வனத்துறை திணறல்...

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன்- 1 பகுதி முதுமலை, ஸ்ரீமதுரை ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்த புலி, 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதர்களையும் அடித்து கொன்றது. இதனையடுத்து, மசினகுடி வனப்பகுதியில் உலா வரும் ஆட்கொல்லி புலியை தேடும் பணியில், வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவக் குழு, வன ஊழியர்கள் என 120-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 11-வது நாளாக இன்று அதிகாலை 6 மணிக்கு 60 பேர் கொண்ட முதல் குழு, வன பகுதிக்குள் விரைந்துள்ளது. கால்நடை மருத்துவர்களும் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். மேலும், பிரத்யேக கவச உடையணிந்துள்ள ஒரு குழுவும், வனப்பகுதியில் புலியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, அதவை, ராணா, டைகர் ஆகிய 3 மோப்ப நாய்களும் களமிறக்கப்பட்டுள்ளன. சிங்காரா அருகே கல்லல்லா பகுதியில் புலி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அடர் வனப்பகுதியில் உள்ள மூங்கில்களுக்கு இடையே புலி பதுங்கி இருந்ததால், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து, புலிக்கு மயக்க ஊசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

வனத்துறையினர்  சுற்றி வளைத்த நிலையில், அந்த புலி மீண்டும் தப்பி வேறு இடத்திற்கு சென்றுள்ளது. அதனை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ள வனத்துறையினர், எருமையை அடித்து கொன்ற இடம் உள்பட 4 இடங்களில் மரத்தின் மீது பரன் அமைத்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் அதன் நடமாட்டம் இருந்த இடத்தில், கன்று குட்டியை கட்டி வைத்து கண்காணிக்கவும் முடிவு எடுத்துள்ளனர்.