தந்தை வாங்கிய கடனுக்காக மகனின் வங்கி கணக்கு முடக்கம்: மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் மகன் உயிரிழந்த பரிதாபம்...

தந்தை வாங்கிய பயிர்க் கடனுக்காக மகனின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதால், மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தை வாங்கிய  கடனுக்காக மகனின் வங்கி கணக்கு முடக்கம்: மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல்  மகன்  உயிரிழந்த  பரிதாபம்...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குள்ளம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி,   கேத்தனூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த 2017 ஆம் ஆண்டு பயிர் கடனாக 75 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் ரங்கசாமி காலமானதையடுத்து, பயிர் கடனுக்காக அவருடைய மகன் கனகராஜின் வங்கி கணக்கை வங்கி நிர்வாகம் முடக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திடீர் உடல்நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகராஜ், மருத்துவ சிகிச்சைக்காக பணம் எடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். கனகராஜின் உடல்நிலை குறித்து எடுத்துக்கூறி அவரது சேமிப்பு கணக்கை விடுவிக்கும்படி கேட்டதாகவும், அதற்கு வங்கி அதிகாரி மெத்தனமாக பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கனகராஜ், மன உளைச்சலில் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த விவசாயி கனகராஜின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும் அலட்சியமாக செயல்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.