முன்னாள் அமைச்சர் தங்கமணி மருமகன் மீது நில அபகரிப்பு புகார்...

முன்னாள் அமைச்சர் தங்கமணி மருமகன் மீது நில அபகரிப்பு புகார்...

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக ஒருவர் புகார் அளித்துள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள்  புகார் அளித்தவரின் பன்னை வீட்டிற்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூர் ராக்கி பாளையம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் ரெட்டி என்பவர் கண்டியன் பகுதியில் 2 புள்ளி 26 ஏக்கரில் பண்ணை வீடு ஒன்று கட்டி வருகிறார். இவர், கட்டுமான பணிகளுக்கு போதியளவு பணம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகனான தினேஷிடம் 50 லட்சம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். அப்போது தினேஷ் அவரது உறவினர்களான தங்கராஜ் மற்றும் ஹரிபாஸ்கர் பேரில் நிலத்தை பதிவு செய்துக் கொடுக்க வேண்டும் என்றும், 11 மாதத்தில் பணத்தை திருப்பி கொடுக்கும் பட்சத்தில் பத்திரம் ரத்து செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதனை நம்பி சஞ்சய் குமார் ரெட்டி பத்திரப்பதிவு செய்துக் கொடுத்து சொத்தின் வழிக்காட்டு மதிப்பின் படி 20 லட்சத்து 39 ஆயிரம் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு தொட்டிபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்துக் கொடுத்துள்ளார்.

இதனிடையே அந்த நிலத்தை காங்கேயத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் விற்பதற்கு தினேஷ் முயற்சித்து வருவாதாக சஞ்சய் குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தினேஷை நேரில் சந்தித்து தான் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும், பத்திரத்தை ரத்து செய்யுமாறு கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து சஞ்சய் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் பத்திரத்தை ரத்து செய்யவேண்டும் என மனு அளித்தார். பின்னர் கோவை பதிவுத்துறை துணை தலைவர் அலுவலகத்தில் தனது நிலத்தை மீட்டு தரக்கோரி மனு அளித்துள்ளார்.

 

இந்தநிலையில் பண்ணை வீட்டு முன்புற கேட்டை உடைத்து தினேஷின் ஆதரவாளர்கள் உள்ளே நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.