தொடங்கியது உள்ளாட்சித் தேர்தல் - ஆர்வமுடன் வாக்களிக்கும் பொதுமக்கள்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தொடங்கியது உள்ளாட்சித் தேர்தல் - ஆர்வமுடன் வாக்களிக்கும் பொதுமக்கள்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், 2 ஆயிரத்து 981 இடங்கள் போட்டியின்றி நிரப்பப்பட்டுள்ளதால், மீதமுள்ள 23 ஆயிரத்து 998 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில், 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்களிலும்., தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர் உள்ளிட்ட 5 பகுதிகளிலும், திருப்பத்தூரில் சோலையார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி என 4 பகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜாவிலும், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியங்களும்., கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை பகுதிகளிலும் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத்திலும், செங்கல்பட்டில் இலத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களிலும்., அதிகபட்சமாக விழுப்புரத்தில் செஞ்சி, கண்டமங்கலம், வானூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்  மாலை 5 முதல் 6 மணி வரை கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.