வேலை செய்யும் இடத்தில் மலர்ந்த காதல்... எச்சரித்த ஓனர்...காதலை கைவிட மறுத்த இளைஞரை கட்டி வைத்து அடித்த கொடூரம்.!

வேலை செய்யும் இடத்தில் மலர்ந்த காதல்... எச்சரித்த ஓனர்...காதலை கைவிட மறுத்த இளைஞரை கட்டி வைத்து அடித்த கொடூரம்.!

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிஹரசுதாகர். 18 வயது நிரம்பிய இவர், ஆனைமலை அருகே உள்ள சக்தி நகரில் வசித்து வந்துள்ளார். தலித் வகுப்பை சேர்ந்த இவர், அதே பகுதியை சேர்ந்த மேஜர் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் சுமார் 5 வருடங்களாக கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஹரிஹரசுதாகர் வேலை செய்யும் இடத்திற்கு மதுரையை சேர்ந்த இளம்பெண் சமையல் வேலைக்காக  வந்துள்ளார்.

22 வயதாகும் இளம்பெண்ணும், ஹரிஹரசுதாகரும் ஒரே தோட்டத்தில் வேலை செய்யும்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. அதனைதொடர்ந்து அடிக்கடி இருவரும் தோட்டத்தில் சந்தித்து பேசி வந்தனர்.

ஒரு நாள் இவர்களின் காதல் அந்த தோட்டத்தில் ஓனரான ராமசாமிக்கு தெரியவந்துள்ளது. ஆத்திரமடைந்த அவர், ஹரிஹரசுதாகரை அழைத்து இனி இப்படியெல்லாம் நடந்து கொள்ள கூடாது என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஹரிஹரசுதாகர் வேலையை விட்டு நின்றுவிட்டு, வேறு ஒருவரின் தோட்டத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். இருந்தும் காதலர்கள் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த விஷயம் பழைய தோட்டத்து ஓனரான ராமசாமிக்கும் அவரது மனைவிக்கும் தெரியவரவே, அவர்கள் இருவரும் ஹரிஹரசுதாரின் பெரியம்மாவை சந்தித்து உங்கள் மகன் எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் செல்போனில் பேசி வருகிறார். கண்டித்து வையுங்கள் என கூறியுள்ளனர்.

இதற்கிடையில் பழைய ஓனரின் வீட்டிற்கு ஒரு நாள் சென்ற ஹரிஹரசுதாகர் வீட்டு வாசலில் நின்றபடி தனது காதலியை அழைத்துள்ளார். அந்த பெண் வெளியில் வராததால் ஆதங்கத்தில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்ததாக தெரிகிறது. இதனை அங்கு வேலை செய்து கொண்டிருந்த சக வேலையாட்கள் பார்த்தது மட்டுமல்லாமல் ஆத்திரத்தில் சுவர் ஏறி குதித்த ஹரிஹரசுதாகரை பிடித்து தோட்டத்தில் இருந்த கயிற்றால் அவரை மரத்தில் கட்டி வைத்து, கட்டையால் சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர்.

வேலையாட்கள் தாக்கியதில் முதுகு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் ரத்தம் கொட்டியபடி வலியால் துடித்து அங்கேயே மயங்கி விழுந்தார் இளைஞர் ஹரிஹரசுதாகர். இதனை ஓனர் ராமசாமி உட்கார்ந்திருந்து வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இளைஞரை விடுவித்த அவர்கள், இனி இந்த பக்கம் வந்தால் கொன்று விடுவோம் என மிரட்டியும் உள்ளனர்.

வலியால் துடித்தபடியே வீட்டிற்கு சென்ற ஹரிஹரசுதாகரை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தபடி அருகில் இருந்த வேட்டைகாரன் புதூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஆனைமலை காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர்.புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், ஹரிஹரசுதாகரை தாக்கிய ஓனர் மற்றும் கேசவன், ராமன், காளிமுத்து, ராசாத்தி. 2 வடமாநில தொழிலாளர்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.