மணப்பாறை அருகே 45 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு விழா

தேனிமலை கன்னிமாரம்மன், கருப்பசாமி கோவிலில் கோலாகலமாக நடந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

மணப்பாறை அருகே 45 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருப்பூர் கல்லுமலையில் உள்ள தேனிமலை கன்னிமாரம்மன், கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மலையாள கருப்பு, பாப்பாத்தியம்மன், சன்னாசி, சந்தனகருப்பு ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சந்நதிகள் உள்ளன.

இக்கோவில் புனரமைக்கப்பட்டு  நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்ததை அடுத்து புரவி எடுப்பு எனும் குதிரை எடுப்பு திருவிழா சுமார் 45 ஆண்டுகளுக்கு பின் இன்று நடைபெற்றது..

நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்கள் தங்களின் நேற்றிக் கடனை நிறைவேற்றும் வகையில் கன்னிமார், கருப்பசாமி சிலைகள் மற்றும் குதிரை, காளை, பசு, ஆடு,  உள்ளிட்ட சுடு மண்ணால் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சிலைகளை பொன்னுசங்கம்பட்டியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருப்பூருக்கு வயல்வெளிகள் வழியாக தலையில் சுமந்து வந்தனர்.

அங்கு சிலைகள் அனைத்தையும் வரிசையாக வைக்கப்பட்ட பின்னர் சிறப்பு வழிபாடு நடத்தி சிலைகளுக்கு கண் திறப்பு நடைபெற்றது. அதன் பின்னர் தாரை, தப்பட்டை முழங்க பட்டாசு வெடிக்க பக்திப்பரவசத்துடன் கல்லுமலையில் மேல் உள்ள ஆலயத்திற்கு ஊர்வலமாக சிலைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றனர்.

அதன் பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.