எல். முருகனை பலிகடா ஆக்கிவிட்டார்கள்... திருமாவளவன் கருத்து...

எல்.முருகனை பலிகடா ஆக்கிவிட்டதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

எல். முருகனை பலிகடா ஆக்கிவிட்டார்கள்... திருமாவளவன் கருத்து...

சமீபத்தில் மத்திய அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற நடைமுறை இருப்பதால், மாநில தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டிய நிலையில் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் எல்.முருகனை பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்கியது அவருக்கு செய்த அவமரியாதை என்று தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். சிதம்பரம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்தபோது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மேகதாதுவில் அணைக்கட்டக் கூடாது. அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும். அது தொடர்பாக நம்பிக்கை அளிக்கும் வகையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த முதலமைச்சரை பாராட்டுகிறேன். இதுகுறித்து அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும்.

கொங்கு நாட்டைப் பிரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், பாஜக ஒரு சமூகப் பிரிவினைவாத சிந்தனை கொண்ட கட்சி. மதம், ஜாதி பெயரால் பிளவை ஏற்படுத்தும் அரசியல் உக்தி இது. பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் இதுபோன்ற உக்திகளை செய்து வருகிறது. 

பாஜக தலைவராக இருந்த எல்.முருகனை நீக்கியது தவறு. அது அவருக்கு செய்த அவமதிப்பு. அவரால் தான் தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். முருகனை பலிகடா ஆக்கிவிட்டு ஆறுதல் அளிக்கும் விதமாக அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. முருகன் கையில் இருந்த அவரின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. இதை மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மொழி, இனம் அடிப்படையில் தேசிய அளவில் அனைவரும் அணி திரள்வதை பாஜக ஒருபோதும் விரும்புவதில்லை என திருமாவளன் கூறினார்.