புறநகர் ரயில் என்ஜினில் கோளாறு: மற்ற ரயில்களும் கால தாமதம்!

புறநகர் ரயில் என்ஜினில் கோளாறு: மற்ற ரயில்களும் கால தாமதம்!

பொன்னேரி: கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில் என்ஜினில் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிப்பு.

ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய மெமு விரைவு ரயில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை தாண்டி பொன்னேரி நோக்கி வரும் பொழுது இன்ஜினில் பழுது ஏற்பட்டு கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து  ரயில்வே ஊழியர்கள் இன்ஜினில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து எஞ்சின் பழுதான மெமு விரைவு ரயில் பொன்னேரி ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பொன்னேரி ரயில் நிலையத்தில் மாற்றுப்பாதையில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் 30 நிமிடம் கால தாமதத்திற்கு பிறகு இயக்கப்பட்டன. 

சுமார் 1மணி நேரத்திற்கு பிறகு என்ஜின் பழுதான மெமு ரயில் சரிசெய்யப்பட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. தொடர்ச்சியாக சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுவதால் ரயில் பயணிகள் அவதிப்பட்டு வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. 

நேற்று பொன்னேரி அருகே மின்சார பராமரிப்பு ரயில் தடம் புரண்டதன் காரணமாக புறநகர் ரயில் சேவை சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இன்றும் இரண்டாவது நாளாக சென்னை கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் புறநகர் ரயிலில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதால் ரயில் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

புறநகர் ரயில்கள் காலதாமதம் காரணமாக அலுவலகம் செல்வோர், பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தை முழுமையாக 4வழி தடமாக மாற்றி புறநகர் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.