” நாட்டிலேயே தமிழகத்திற்கு அதிகபட்சமாக நிதி ஒதுக்கீடு ” - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

” நாட்டிலேயே தமிழகத்திற்கு அதிகபட்சமாக  நிதி ஒதுக்கீடு ” - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

நாட்டிலேயே தமிழகத்திற்கு அதிகபட்சமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.பல்வேறு மலைகளை தாண்டி, குகைகளை தாண்டி, அருவிகள்,நீர்வீழ்ச்சிகள், பசுமையான பள்ளத்தாக்குகள்,இதமான சூழ்நிலை உள்ளிட்டவற்றை அனுபவிப்பதற்காக தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா, கேரளா உள்ளிட்ட உள்நாடுகளில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும்,கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள டர்பனில் நடைபெற்ற வேர்ல்ட் ஹெரிடேஜ் கமிட்டி இந்தியாவில் புகழ்பெற்ற மலை ரயில்களில் ஒன்றான நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கியது.யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று தற்போது 18 ஆண்டுகள் நிறைவு பெற்று 19 ஆம் ஆண்டில் இந்த நீலகிரி மலை ரயில் காலடி எடுத்து வைத்துள்ளது. 

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலாப்பயணிகளின் கோரிக்கையினை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலை ரயிலில் அதிநவீன வசதிகளுடன் சென்னை பெரம்பூர் இணைப்புப்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளுடன் இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்த மலை ரயில் இயக்கத்தை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த மலை ரயிலில் 184 பயணிகள் பயணம் செய்து மகிழ்ச்சியடைந்தனர். பயணிகளுக்கு இனிப்பு கொடுத்தும்,ரயில்வே நிர்வாகத்தில் வழங்கப்பட்டு வரும் காம்ப்ளிமென்ட்ரி பொருட்களையும் கொடுத்து கையசைத்து அமைச்சர் முருகன் அனுப்பி வைத்தார். 

முன்னதாக யூனோஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.மேலும், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பயணச்சீட்டு மைய கட்டிடத்தையும் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்:- 

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வியாபாரிகள், குழந்தைகள், வயதானவர்கள் தண்டவாளத்தை எளிதில் கடக்கும் வகையில் இரண்டு எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட உள்ளன. அதேபோல் தண்டவாளத்தை புதுப்பிக்கும் பணியும் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.  

மேலும்,கோவையில் மட்டும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேட்டுப்பாளையம், குன்னூர்,ஊட்டி ரயில் நிலையங்களை அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா ரயில்வே துறையில் வேகமாக முன்னேறி வருகிறது.ரயில்வே துறை மேம்பாட்டுக்காக நாட்டிலேயே தமிழகத்திற்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.9  புதிய ரயில்வே தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும்,1800 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம்,மதுரை, கன்னியாகுமரி, சென்னை எழும்பூர், உள்ளிட்ட 5 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.அதேபோல் தமிழகத்தில் 90 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அதனை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும்,சேலத்தில் தேவையான வசதிகள் உள்ளன.புதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.சேலம் கோட்டத்தில் இருந்து கோவை கோட்டமாக மாற்ற வேண்டியதில்லை.பதிலாக கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்தி பல்வேறு வசதிகளை செய்து தரலாம்.இதனால் கோவை கோட்டமாக மாற்றப்பட வாய்ப்பு இல்லை என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ்,சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா,சேலம் கோட்ட உதவி மேலாளர் சிவலிங்கம், வணிக மேலாளர் பூபதி ராஜ், முதுநிலை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் பரிமளக்குமார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள்,பாஜக மாவட்ட தலைவர் சங்கீதா, மேட்டுப்பாளையம் முன்னாள் நகர் மன்ற தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பல திரளாக கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க    | "பாஜகவினர் இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்ல முற்படுகிறார்கள்" ஹைதர் அலி குற்றச்சாட்டு!