இதுவரை இல்லாத அளவில் பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு; அமைச்சர் சக்கரபாணி தகவல்!

 இதுவரை இல்லாத அளவில் பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு; அமைச்சர் சக்கரபாணி தகவல்!

பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்த இதுவரை இல்லாத அளவில் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி பேசியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கிழக்கு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 350 மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

மாவட்ட செயலாளர் மதியழகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னை முன்னிறுத்தாமல் தமிழகத்தை முன்னிறுத்தி ஆட்சி செய்கிறார். பள்ளி கல்வித்துறைக்கு இதுவரை இல்லாத அளவில் 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தி வருகிறார். மேலும் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதே போல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி திட்டம் வழங்கப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத திட்டங்களையும் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதன்படி 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் மறைந்த முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரில் துவங்கப்பட உள்ளது. மேலும் தமிழகத்தில் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்ததால் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பள்ளி கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்வித்துறையை முதல்வர் ஊக்கப்படுத்தி வருகிறார். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள் பள்ளிக்கும் பெற்றோருக்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் உயர வேண்டும் என பேசினார்.

இதையும் படிக்க:தோடர் இன மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி!