"தமிழகத்தில் நிஃபா வைரஸ் தாக்கம் இல்லை" அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி!

தமிழகத்தில் இதுவரை நிஃபா வைரஸ் தாக்கம் எங்கும் இல்லை என சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதார துறை செயலாளர் ககன்தீப் சிங்பேடி, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு திட்ட இயக்குனர் சில்பா பிராபாகர், பொதுசுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயாகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து மாவட்ட சுகாதார துறை இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்கள், அனைத்து மருத்துவமனையின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்த வேண்டும். டெங்கு வார்டுகளில் கொசுவலையுடன் இருக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காய்ச்சல் என்றால் உடனே மருத்துவமனை வரும் அளவிற்கு மக்களிடம் சொல்ல வேண்டும். இதுபோன்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்த கேட்டுக்கொண்டார். மேலும், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஒருவர் இறந்தார் என்ற நிலை இருக்க கூடாது. நோயாளிகளை உறவினர்கள் போன்று சென்று கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது, சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கட்டிட பணிகள், வீடுகளில் ட்ரம்களில் சேர்த்து வைத்துள்ள தண்ணீர்களில் கொசு உற்பத்தி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டெங்கு கொசு நல்ல தண்ணீரில் பரவும் கொசு என்று  மக்களிடம் விழிப்புணர்வை கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தை பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டு டெங்குவால் 66 பேர், 2017 ஆம் ஆண்டு டெங்குவால்  65 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த 9 மாதங்களில் 4048 டெங்குவால் பாதிக்கப்பட்டு இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர், பூங்கா, குடியிருப்புகள் போன்ற இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அங்கிருந்து கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றார். மேலும், மருத்துவ துணை, மற்றும் இணை இயக்குநர்கள் மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிக்காமல் கண்காணிக்க வேண்டும் என கூறினார். 

இறுதியாக செய்தியாளர்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உயரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், டெங்கு குறித்து தலைமை செயலாளர் தலைமையிலும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தமிழகத்தில் உள்ள இணை துணை இயக்குநர்கள், கல்லூரி முதல்வர்கள் என 296 மருத்துவ அதிகாரிகளுடன் இன்று மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு  தடுப்பு தொடர்பாக கூட்டமானது தற்போது நடந்துள்ளதாக பேசியவர் இதில் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தமிழகத்தில் உள்ள 12,000 மருத்துவ கட்டமைப்புகளிலும் இவை பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த ஆண்டு 4048 பேருக்கு டெங்கு  பாதிப்பு என்பது அச்சப்பட வேண்டியது இல்லை எனவும் இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

தொடர்ந்து பேசியவர், நிஃபா வைரஸை பொறுத்தவரை தமிழகத்தில் எல்லை மாவட்டங்களான 6 மாவட்டங்களிலும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் இதுவரை நிஃபா வைரஸ் தாக்கம் எங்கும் இல்லை என்றார். திருவாரூர் பயிற்சி மருத்துவ மாணவி சிந்து உயிரிழந்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர்,  உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு ஏற்கனவே பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும், அவருக்கு டெங்கு போன்ற எந்த வைரஸ் பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை...!