அமைச்சர் சேகர் பாபு பயந்துவிட்டார்..அண்ணாமலை விமர்சனம்...!

அமைச்சர் சேகர்பாபு பயந்து விட்டார் என்பதை அவரது உடலே காட்டிக் கொடுப்பதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு பயந்துவிட்டார்..அண்ணாமலை விமர்சனம்...!

சென்னை அடையாறில் நேற்று பாஜக சார்பில் இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

அப்போது பேசிய அண்ணாமலை, “நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றும், அந்த நிகழ்ச்சியில் திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்காதது துரதிருஷ்டவசமானது. பட்டியலின மக்களை அவர்கள் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர்” என்று குற்றச்சாட்டினார்.

அம்பேத்கரை திமுக, காங்கிரஸ் மற்றும் விசிக முழுமையாக மறந்துவிட்டது. பட்டியலின மக்களை வெறும் வாக்கு வங்கியாகவே திமுக போன்ற கட்சிகள் வைத்துள்ளன, அதை பாஜக உடைத்து வருகிறது. பட்டியலினத்தவரைப் பிரதமராக்குவதே மோடியின் கனவு, அதை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும் எனவும் கூறினார்

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அரசியலமைப்பு சட்டத்தை நாசம் செய்தது காங்கிரஸ் தான். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய தேர்தல் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரவில்லை என்பதற்காக அவசர நிலையைக் கொண்டு வந்ததாகவும், இந்தியாவில் அதிகமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைக் கலைத்தது காங்கிரஸ் தான்” என்றும் கூறினார்.

மேலும் பாஜக அரசில் மரபு பின்பற்றப்படவில்லை என சு. வெங்கடேசன் எம். பி விமர்சித்தது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் போது அவரை உற்சாகப்படுத்த உறுப்பினர்கள் கத்துவது எந்த வகையில் மரபை மீறிய செயல்” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அரசு சட்டம் இயற்றும்போது எப்போதும் உறுப்பினர்களுக்கு நகல் வழங்கவில்லை என்பதை சு.வெங்கடேசன் கூற வேண்டும் என தெரிவித்தார்.  

குஜராத் மாடல் என தாங்கள் எல்லா இடத்திலும் கூறுவது ஏன் என்ற கேள்விக்கு, “அது ஊழலற்ற மாடல். அதே வேளையில் தமிழக பாஜக குஜராத்தை கொண்டாடாது, தமிழகத்தைத்தான் கொண்டாடும்” என அவர் விளக்கமளித்தார்.

பாஜக ஆட்சியை பிடிக்காது அண்ணாமலை கனவு காண்கிறார் என்ற அமைச்சர் சேகர் பாபு கூறியது குறித்து பேசிய அண்ணாமலை, “அமைச்சர் சேகர்பாபு பயந்து போய் இருப்பதை தற்போது பார்க்கிறேன். எப்போதும் கூலாக இருக்கும் அவர் முதல்முறையாக ஆடிப்போய் இருப்பதை பார்க்கிறேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சொன்னதை செய்யும். அமைச்சர் சேகர்பாபு பயந்துவிட்டார் என்பதை அவரது உடலே காட்டிக் கொடுக்கிறது என விமர்ச்சித்தார்.