அண்ணாமலைக்கு 24 மணி நேர கெடு விதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி...

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்த ஆதாரங்களை 24மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி காலவகாசம் வழங்கியுள்ளார்.

அண்ணாமலைக்கு 24 மணி நேர கெடு விதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி...

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை நடத்தினார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,பருவமழையை எதிர்கொள்ள கூடிய வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். எனவே சீரான மின் விநியோகத்திற்கு துறை தயாராக இருக்க ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

மேலும் நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது. பல மாநிலங்களில் மின் தடை ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மின்தடை இல்லாத வகையில் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய அமைச்சர்,

இந்திய அரசின் மின்சந்தையில் இதுவரை 1.04% தான் நாம் மொத்த தேவையில் கொள்முதல் செய்கிறோம் அதுவும் நிலக்கரி பற்றாக்குறையினால் தான் என்றும், குஜராத் தான் அதிகம் வெளிச்சந்தையில் மின் கொள்முதல் செய்துள்ளதாகவும், அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளதாகவும் கூறினார். கடந்த கால ஆட்சியின் தவறுகளை சரிசெய்யும் வண்ணம் தான் தற்போது மின்வாரியத்தின் செயல்பாடுகள் உள்ளது என்றார். 

இந்நிலையில் மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு தான் வர தயார் என்று கூறினார். அதுமட்டுமின்றி தன்னிடம் உள்ள ஆதாரங்களை 24மணி நேரத்தில் வெளியிட வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி காலவகாசம் வழங்கினார்.

எனவே தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுங்கள் அதையும் சந்திக்க தயார் என்று திட்டவட்டமாக கூறினார்.