அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் மேலும் நீட்டிப்பு..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். 

ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த  மனுவை விசாரிப்பதில் பல்வேறு குளறுப்படிகள் நடைபெற்ற நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அல்லி அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை (இன்று ) விசாரணைக்கு வந்தது. அப்போது  செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,  செந்தில் பாலாஜியை, பாஜகவில் இணைய அமலாக்கத்துறை வற்புறுத்தியதாக தனது வாதத்தில் குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய செந்தில் பாலாஜியின் மற்றொரு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறையில் இருப்பதால் சாட்சிகளைக் கலைக்க முடியாது என்றும், தற்போது உள்ள உடல் நிலையில் செந்தில் பாலாஜியால் எங்கும் தப்பிச் செல்ல முடியாது என்றும், வேண்டுமானால் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம் என்றும் கூறி ஜாமீன் கோரினார்.  

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் கோர முடியாது என்றும் ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல என்றும் வாதத்தை முன்வைத்தது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 20-ம் தேதி வழங்கப்படும் என்று  உத்தரவிட்டார்.  மேலும்  செப்டம்பர் 29- ஆம் தேதி  வரை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து  நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதன் மூலம் இரண்டு மாதங்களுக்கு  மேல்“ அமைசசர் செந்தில் பாலாஜி சிறைவாசம் அனுபவித்து  வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும்  படிக்க   | " ஒரு ஹீரோவுக்கு நெருக்கடி இருந்தால் தான் ஹீரோ" - இயக்குனர் மிஷ்கின்