அனைத்து சாதியும் அர்ச்சகர் விவகாரம்...! நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு -அமைச்சர் சேகர்பாபு...!!

அனைத்து சாதியும் அர்ச்சகர் விவகாரம்...! நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு -அமைச்சர் சேகர்பாபு...!!

அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணி நியமன ஆணயை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை  கிளை தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை தலைமை  அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அதிகாரிகளுடன் மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் அமைச்சர் சேகர்பாபு, கடந்த நிதி ஆண்டில் துறையின் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் முழுமையாக முடிவுற்றள்ளதை உறுதி செய்யவும், தற்போதைய மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என சீராய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகளை விரைவாக முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் பேசிய அவர், இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள கோவில்கள் மட்டுமின்றி, மக்கள் அதிகம் கூடக்கூடிய, பிரச்சனைக்கு உரிய கோவில்களில் கூட அறநிலையத்துறை தலையிடலாம் என சட்டத்தில் உரிமை உள்ளதால் அறநிலையத்துறை தலையிட்டு மக்களுக்கான தேவையை செய்து கொடுக்கும் எனவும், மதுரை சித்திரை திருவிழாற்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக  நடைபெற்று வருவதாகவும் மேலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சிறு குறையுமில்லாமல் அனைத்து வசதிகளுடன் சிறப்பாக திருவிழா நடத்தப்படும் எனக் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் ஆன்மீக வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது எனவும், விரைவில் மாணவர்களை ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்து செல்ல உள்ளோம் எனவும் இதன் வரவேற்பை பொறுத்து இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் கூறினார். இறுதியாக, அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்த பணி நியமன ஆணயை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி கொடுத்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலைத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.