5 கோடி ரூபாய் செலவில்...எழில் மிகு பேருந்து நிலையங்களாக விரைவில் மாற்றுவோம்!

5 கோடி ரூபாய் செலவில்...எழில் மிகு பேருந்து நிலையங்களாக விரைவில் மாற்றுவோம்!

வடசென்னையில் 5 பேருந்து நிலையங்கள் மறுசீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பணி 3 மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் 2023-24 ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளான தலா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 பேருந்து நிலையங்களை நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையமாக மேம்படுத்துவது தொடர்பாக, சென்னை அம்பத்தூர் எஸ்டேட், பெரியார் நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்களை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிக்க : காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன... ?

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை அறிவிப்புகளின்படி வடசென்னையை மேம்படுத்துவதற்காக பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி, பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், பாலங்கள் கீழ் உள்ள பகுதிகள் உள்ளிட்டவற்றை சிறந்த முறையில் பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு அழகு படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது, ஐந்து பேருந்து நிலையங்களை மேம்படுத்த திட்டமிட்டு, இன்று அம்பத்தூர் எஸ்டேட், பெரியார் நகர் பேருந்து நிலையம் , திரு வி க  நகர் பேருந்து நிலையம் , முல்லை நகர் பேருந்து நிலையம், கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

இந்த பேருந்து நிலையங்களை 5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி எழில் மிகு பேருந்து நிலையங்களாக விரைவில் மாற்றுவோம் என்று கூறினார். அதோடு, வடசென்னை வளர்ச்சிக்காக  ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழ் இந்த பணிகள் செய்யப்படுவதாகவும், வடசென்னை வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி முழுமையும் அதன் வளர்ச்சிக்கே பயன்படுத்துவோம் எனவும் உறுதி தெரிவித்தார்.