மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு

கன்னியாகுமரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு

கன்னியாகுமரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரியில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால், அங்குள்ள அணைகளில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் முஞ்சிறை, பார்த்திபபுரம், மங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், சாலை போக்குவரத்து துண்டிக்கப் பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த அமைச்சர்கள் மனோ தங்கராஜ் மற்றும் செந்தில்பாலாஜி, பார்த்திபபுரம் அரசு தொடக்கபள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். புதுக்கடை பகுதியில் மழை காரணமாக சேதமடைந்த மின்மாற்றி, புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதனை இயக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, குமரியில் மழை வெள்ளத்தால் 75 லட்ச ரூபாய் மதிப்பிலான மின்வாரிய பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார். அமைச்சர்கள் ஆய்வின்போது கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர்.