ஒற்றைத்தலைமை என்பது காலத்தின் கட்டாயம் - ஜெயக்குமார்

அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை தேவை என்பது காலத்தின் கட்டாயமாகிறது என முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஒற்றைத்தலைமை என்பது காலத்தின் கட்டாயம் - ஜெயக்குமார்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்பது பெரும்பாலான தொண்டர்களின் எண்ணம் என்றும், அதுதான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரதிபலித்தது என்றும் தெரிவித்தார். 

அந்தத் தலைமை யார் என்பது குறித்து விரைவில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டு அறிவிக்கப்படும் என்று பேசிய அவர், ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயமாகிறது என்றும் கூறினார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தேவை என்ற கருத்து பகிரப்பட்டதாவும், அழுத்தமாக வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதைத்தான் தாம் செய்தியாளர்களிடம் பகிர்ந்ததாகவும், அதை உதாசீனப்படுத்தாமல் செயல்வடிவம் கொடுக்க வேண்டியது கட்சி பொதுக்குழுவின் கடமை என்றும் சுட்டிக் காட்டினார்.  

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டமே பலமுறை திருத்தப்பட்டபோது, கட்சியின் விதிகளும் பொதுக்குழுவால் திருத்தப்படலாம் என்று பேசினார்.

திமுகவை எதிர்ப்பது மட்டுமே என்றென்றும் கட்சியின் குறிக்கோள் என்று பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரும் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்றும், அதில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டும் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.