கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- முக்கிய வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி  

தமிழகத்தில் சில இடங்களில் பெய்த கனமழையால், ஆறு மற்றும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- முக்கிய வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி   

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதனால் பழனி பேருந்து நிலையம், காந்திரோடு, ரயிலடி சாலை, திண்டுக்கல் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், முறையாக வடிகால் அமைக்கப்படாத காரணத்தால், சாலைகளில் தேங்கி நின்ற மழைநீர், அருகில் உள்ள கடைகளுக்குள்ளும் புகுந்தது. இதனிடையே, கனமழை காரணமாக  பாலாறு-பொருந்தலாறு அணை, குதிரையாறு அணை, வரதமாநதி அணை ஆகியவற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கும் பஞ்சம் ஏற்படாது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனிடையே, ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்றவாறு மழை பெய்ததால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் மழைநீர் தேங்கி ஆறு போல் ஓடியதால், அவ்வழியாக நடந்து சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, திருமூர்த்தி மலை, அமராவதி, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால் நிலக்கடலை, சோளம், கம்பு ஆகியவை பயிரிடும் மானாவாரி சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம்  கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விளைநிலங்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளிலும் மழை மற்றும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும்  வாணியம்பாடி பகுதியில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.