100 சதவீதம் வெற்றி பெற வேண்டும்... தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றிபெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

100 சதவீதம் வெற்றி பெற வேண்டும்... தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

திமுக-வின் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டபேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டபேரவை உறுப்பினர்கள் என 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உரை ஆற்றும் போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியினருடன் மாவட்டச்செயலாளர்கள் சுமூகமாக பேசி இடங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என கூறினார்.

மேலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று பதவிகளை எண்ணாமல் பொறுப்புடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

நிறைவாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் ஒராண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.