கால்-ல காயம்-னா உயிரா போகும்.. கூலித் தொழிலாளி மர்மச்சாவு.. உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு!!

திருவாடானை அருகே தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற கூலித் தொழிலாளி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

கால்-ல காயம்-னா உயிரா போகும்.. கூலித் தொழிலாளி மர்மச்சாவு.. உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தொண்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான முருகன் வயது-38. இவருக்கு திருமணமாகி தொண்டீஸ்வரி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு முருகன் தனது காலில் நீண்ட நாட்களாக இருந்த காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அதே பகுதியில் உள்ள தனியார் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்ட போது திடீரென உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முருகனை மீட்டு அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் முருகனை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த முருகனின் உறவினர்கள் அவருக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் கிளினிக் மருத்துவரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்ககோரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த முருகனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் அதன்பிறகு மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், பரமக்குடி டிஎஸ்பி.திருமலை, திருவாடானை தாசிந்தார் செந்தில் வேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன் பிறகு போலீசார் இறந்த முருகனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சம்பவம் தொடர்பாக தனியார் கிளினிக் மருத்துவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.