நீட் விலக்கு; திமுக தோல்வியை ஒப்புக் கொள்ள தயாரா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய உதயநிதி தற்போது ஒரு கோடி கையெழுத்து கேட்பதன் மூலம் தோல்வியை ஒப்புக் கொள்ள தயாரா என்று சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதிமுக சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார், திமுகவிற்கு எதிராக கேள்விகளை எழுப்பி காணொலி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள காணொலியில், ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம், அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், இரண்டரை ஆண்டு காலம் கையெழுத்து போடாமல், தற்போது மதுரையில் நீட்டை ரத்து செய்ய ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறுவோம் என்று கூறுகிறார். மேலும், என்னை கையெழுத்து போட தயாரா என்றும் சவால் விட்டு உள்ளார்.

இதையும் படிக்க : கனடா நாட்டினருக்கான விசாவிற்கு தடை - மத்திய அரசு அதிரடி

அவரின் பக்குவபடாத கேள்விக்கு நான் பதில் சொல்லுவதாக பேசிய ஆர்.பி.உதயகுமார், நீட் தேர்வை ஒரே கையெழுத்து மூலம் ரத்து செய்வன் என்று சொல்லிவிட்டு,  தற்போது ஒரு கோடி பேரின் கையெழுத்து தேவை என்பதை நீங்கள் கூறுவதன் மூலம், திமுக தோல்வி அடைந்து விட்டது என்று தோல்வியை ஒப்புக்கொள்ள தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், அப்போது தான் தற்கொலையை தடுத்து நிறுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பொய்யுரைத்து மாணவர்கள் இறந்தால் அதற்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என்றும் ,மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க திமுக தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.