தொடக்க கல்வி ஆசிரியர்கள் பேராட்ட அறிவிப்பு; தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!

டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டபடி அக்டோபர் 13ஆம் தேதி பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் போராட்டம் நடைபெறும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தலைமையில்,தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் முன்னிலையில் "டிட்டோ ஜாக்" (தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு) பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டிட்டோஜாக் ஆசிரியர்கள் அக்டோபர் 13 ம் தேதி போராட்டம் அறிவிதிருந்த நிலையில் இன்று இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எங்களது கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அக்டோபர் 13ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார். நாங்கள் வழங்கிய 30 கோரிக்கைகளில் 9 கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஏற்றுக்கொள்வதாகவும் வாய்மொழியாக தெரிவித்தார்.

ஆனால், எங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது தொடர்பாக அறிக்கை வெளியிடவில்லை என்றால், திட்டமிட்டபடி 13ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த கூட்டு நடவடிக்கை குழு தலைவர் வின்சென்ட் பால்ராஜ் பேசுகையில், எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதற்கட்டமாக எழுத்துப்பூர்வமான அறிக்கை வெளியிட வேண்டும். EMIS தளத்தில் வரும் 16ஆம் தேதி முதல் ஆசிரியர் வருகை பதிவு மற்றும் மாணவர் வருகை பதிவை தவிர்த்து 43 வகையான பதிவுகளை மேற்கொள்ள மாட்டோம் என தெரிவித்தார். 

இதையும் படிக்க: "கொடநாடு குற்றவாளிகள் யார் என்பது விரைவில் தெரியவரும்" -மு.க.ஸ்டாலின்!