தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் புதிய நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க கூடாது - அன்புமணி 

தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் புதிய நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க கூடாது - அன்புமணி 

காவிரி பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி, கடலூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் புதிய நிலக்கரி சுரங்கங்களை அமைக்க தமிழ்நாடு  அரசு அனுமதி அளிக்காது என்று  சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில் "என்.எல்.சி சுரங்கங்களால் ஏற்படும் பாதிப்புகளையே இந்த பூவுலகினால் தாங்கிக் கொள்ள முடியாது எனும் நிலையில், மேலும், மேலும் சுரங்கங்களை அமைக்கவும், இப்போதுள்ள சுரங்கங்களை விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசும், என்.எல்.சியும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சுரங்க விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை அரசு எந்திரம் மற்றும் காவல்துறையை பயன்படுத்தியும், அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டும்  கையகப்படுத்தும் முயற்சியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியரும்  ஈடுபட்டு வருகின்றனர்; அந்த நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்." எனக் கோரியுள்ளார்.

மேலும் "தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகிலும் நிலக்கரிக்கான தேவை முடிந்து விட்டது. நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம்  உற்பத்தி செய்வதிலிருந்து சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலம் புதுப்பிக்கவல்ல எரிசக்தியை உற்பத்தி செய்யும் முறைக்கு உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 50 விழுக்காட்டை புதுப்பிக்கவல்ல எரிசக்தி மூலம் பெறும் நிலையை 2020-ஆம் ஆண்டுக்குள்  எட்டுவோம் என்று தங்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு கொள்கைப் பிரகடனம் செய்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து "சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பழுப்பு நிலக்கரி மின்சாரமா... உணவுப் பாதுகாப்பா? என்றால், கண்டிப்பாக உணவுப் பாதுகாப்புக்குத் தான் தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். காலநிலை மாற்றத்தின்  தீயவிளைவுகள் தமிழ்நாட்டிலும் தென்படத் தொடங்கி விட்டன. அடுத்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் உணவுத் தட்டுப்பாடு (Food Scarcity) ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஏக்கர் நிலத்தையும் பாதுகாக்க வேண்டும். அதுதான் நமது எதிர்காலத் தலைமுறைக்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவை ஆகும். இவற்றைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட மூன்று அறிவிப்புகளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாங்கள் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

1. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரி சுரங்கத் திட்டம்,  வீராணம் நிலக்கரி சுரங்கத் திட்டம்,  பாளையம்கோட்டை நிலக்கரி சுரங்கத் திட்டம், மைக்கேல்பட்டி நிலக்கரி சுரங்கத் திட்டம், வடசேரி நிலக்கரி சுரங்கத் திட்டம் ஆகிய 6 நிலக்கரித் திடங்களுக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது.

2. என்.எல்.சி 1, 1ஏ, 2 ஆகிய நிலக்கரி சுரங்கங்களை விரிவாக்கம் செய்வதற்காக உழவர்களுக்கு சொந்தமான நிலங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் மூலமாக கையகப்படுத்தி வழங்கும் பணி நிறுத்தப்படும்.

3. என்.எல்.சி சுரங்கங்கள், அனல்மின்நிலையங்கள் ஆகியவற்றால் கடலூர் மாவட்டத்திலும், அதையொட்டிய மாவட்டங்களிலும் ஏற்பட்டிருக்கும் சமூக, சுற்றுச்சூழல், நீர்வள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை அளிப்பதற்காக சென்னை ஐ.ஐ.டி வல்லுனர்களைக் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைக்கும்." ஆகிய மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருமாறு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த 4ஆம் தேதி சேலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழநாட்டில் புதியதாக 6 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்பை எதிர்த்து சட்டப்பேரவையில் அறிவிக்க முடியுமா? என கேள்வி எழுப்பி இருந்ததும் அதை தொடர்ந்து மறுநாள் புதிய நிலக்கரி திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.