சி.வி.சண்முகம்த்திற்கு அச்சுறுத்தல் இல்லையாம்.. உளவுத்துறை அறிக்கை அடிப்படையிலேயே பாதுகாப்பு வாபஸ் - காவல்துறை விளக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை என மத்திய மாநில உளவுத்துறை அறிக்கைகள் அளித்ததன் அடிப்படையிலேயே போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சி.வி.சண்முகம்த்திற்கு அச்சுறுத்தல் இல்லையாம்.. உளவுத்துறை அறிக்கை அடிப்படையிலேயே பாதுகாப்பு வாபஸ் - காவல்துறை விளக்கம்

போலீஸ் பாதுகாப்பை விலக்கியதற்கான காரணத்தை கூறக் கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சி.வி. சண்முகத்திற்கு அச்சுறுத்தல் வந்ததன் அடிப்படையில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும், கடந்த நவம்பர் மாதம் அவரது பாதுகாப்பை மறு ஆய்வு செய்த போது, அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என மத்திய - மாநில உளவுப் பிரிவினர் தெரிவித்ததால் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாகவும் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், சி.வி.சண்முகத்தின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டதற்கான காரணத்தை இரு வாரங்களில் அவருக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.