டிசம்பர் 31 மற்றும்  ஜனவரி 1ல் கடற்கரைகளில் அனுமதி இல்லை... ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிப்பு ...

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

டிசம்பர் 31 மற்றும்  ஜனவரி 1ல் கடற்கரைகளில் அனுமதி இல்லை... ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிப்பு ...

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுதாய, அரசியல், கலாச்சார கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும் என்றும்,

கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 மற்றும்  ஜனவரி 1 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்றும், அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதி எனவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

ஜனவரி 3-ம் தேதி முதல் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும் என கூறியுள்ளார். இதைப்போல அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களிலும் ஜனவரி 3-ம் தேதி முதல் சுழற்சி முறையின்றி வகுப்புகள் இயல்பாக செயல்படும் என தெரிவித்துள்ள அவர்,

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும், தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கொரோனா வைரசை ஒழிக்க பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் நோய் பரவி வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை அவசியம் என்றும், பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, அனைத்து நிறுவனங்களும் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.