பூங்காக்களை பராமரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்...! மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு...!! 

பூங்காக்களை பராமரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்...! மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு...!! 

சென்னை மாநகராட்சியின் பூங்காக்கள் பராமரிப்பது மற்றும் ஒப்பந்தங்கள் எடுப்பது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் மாதத்திற்கான சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூடத்தில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பூங்காக்கள் பராமரிப்பது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது, குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் ஓரிருவரிடம் மட்டுமே அனைத்து பூங்காக்களின் பராமரிப்பு பணிகளும் உள்ளதால், முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படுவதில்லை என திமுக கவுன்சிலர்கள் கூட்டாக புகார் தெரிவித்தனர். குறிப்பாக, மாநகராட்சி நீச்சல் குளத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் விவாதத்தை எழுப்பியது. நீச்சல் குளம் பராமரிப்பு செய்து வரும் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட தொடர் புகாருக்கு உள்ளாகும் ஒப்பந்ததாரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.  

இதுகுறித்து விளக்கமளித்த ஆணையர் ககன்தீப்சிங் பேடி, பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் ஒப்பந்தம் எடுப்பதில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, பூங்காக்கள் பராமரிப்பு ஒப்பந்தங்கள் பல தொகுப்புகளாக பிரித்து ஒப்பந்தம் கோரப்படும். ஒரு தொகுப்பு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரருக்கு மற்ற தொகுப்பு ஒப்பந்தம் வழங்கப்பமாட்டாது என தெரிவித்துள்ளார். மேலும்  பராமரிப்புக்கான தொகையை பணியின் தர அளவீட்டு மதிப்பெண் அடிப்படையில் விடுவித்தல் மற்றும் புதிய  விதிமுறைகள் படி ஒரு ஒப்பந்ததாரர் அதிகபட்சமாக 10க்கு குறைவான பூங்காக்கள் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வழிவகுக்கும் எனவும் இதனால் தரமாக பூங்காக்கள் பராமரிப்பதும் உறுதி செய்யப்படும் எனவும் ஆணையர் விளக்கமளித்தார். 

இதன் தொடர்ச்சியாக பேசிய மேயர் பிரியா, பராமரிப்பு முறையாக மேற்கொள்ளாமல் தொடர் புகாருக்கு உள்ளான ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.