அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு: 4 மணி நேரத்திற்கு பிறகு சுமுக முடிவு...

அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 

அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு: 4 மணி நேரத்திற்கு பிறகு சுமுக முடிவு...

தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஜூன் 21 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. சட்டப்பேரவையின் எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுத்து, ஒரு மாதம் கடந்தும் எதிர்கட்சி துணை தலைவர், கொறடாவை அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கவில்லை.

இந்நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்தெடுக்கப்பட்டார். இதே போல் சட்டமன்ற அதிமுக கொறடாவாக எஸ்.பி வேலுமணியும், துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சட்டமன்ற அதிமுக பொருளாளராக கடம்பூர் ராஜூவும் செயலாளராக கே.பி அன்பழகனும் துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும்  அதிமுக தலைமை சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதேபோல் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சிக்கு எதிராக செயல்பட்டோரை கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக லட்சியத்துக்கு விரோதமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.