அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் நடத்தும் ஆலோசனை கூட்டம்...!

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் நடத்தும் ஆலோசனை கூட்டம்...!

அதிமுகவில், அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

ஓ.பி.எஸை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய ஈ.பி.எஸ்:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, நேற்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே விலக்குவதாகவும், அவருக்கு ஆதரவாளராக இருக்கக்கூடிய வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரையும் பதவியில் இருந்து நீக்குவதாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஓ.பி.எஸ்:

இதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதலே அதிமுக அலுவலகத்தில் கலவரமானது வெடித்தது. அதில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி. எஸ் தரப்பு தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அந்த சூழ்நிலையில் நேற்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ், அவர் யார் என்னை கட்சியிலிருந்து நீக்குவது, நான் அவரை கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக எடுக்கலாம் தொடர்பாக ஓ.பி.எஸ் அவரது ஆதரவாளருடன் தனது இல்லத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கூட்டத்தில் யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்:

காலை முதலே நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நேற்றிலிருந்தே இந்த சர்ச்சையானது நடைபெற்று வரும் சூழலில், அடிப்படை பதவியிலிருந்தே பன்னீர்செல்வத்தை நீக்கியது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டத்தையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும், நீதிமன்றத்தை நாட இருக்கும் நிலையில் எதுபோன்ற நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுவதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனியார் வங்கிக்கு கடிதம் எழுதிய ஓ.பி.எஸ்:

இதனிடையே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் தன்னை கேட்காமல் வரவு செலவு கணக்கை மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் வங்கிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் படி இன்றுவரை நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளராக இருப்பதாகவும், நீதிமன்றத்தில் கீழ் இந்த வழக்குகள் இருக்கும்பொழுது என்னை கேட்காமல் எந்தவித வரவு செலவு கணக்குகளும் மேற்கொள்ளக்கூடாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று அதிமுக தலைமைக்கழக மேலாளராக இருக்கக்கூடிய மகாலிங்கமும் காவல்த்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.