திருவள்ளூர் முதல் திருவள்ளுவர் சிலை வரை... ஒரு கோடி பனை விதை திட்டம்!!

தமிழகத்தில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்க அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் அக்டோபர் 1 ஆம் தேதி  தொடங்கவுள்ள ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் பணியில் அதிக அளவிலான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது தொடர்பாக அனைத்து இணை இயக்குநர்களுக்கும் எழுதியுள்ள சுற்றிறிக்கையில், திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 1076 கிலோமீட்டர் தூரத்திலும் 1 கோடி பனை விதை விதைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பணி பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்று சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணி திட்டம் ஆகிய அமைப்புகளுடன் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலுடன் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த, பனை விதைகள் விதைக்கும் பணியில், அதிக அளவிலான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க வேண்டுமெனவும், 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் பெற்றோர்களின் அனுமதி கடிதங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். மாணவர்கள் பனை விதைகளை சேகரித்தல் மற்றும் நடவு செய்தல் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அனுமதி கடிதங்களை udhavi.app/panai என்ற இணையதளத்தில் கல்லூரி பெயருடன் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தபட்டுள்ளது

இதையும் படிக்க || "நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும்"