ஜெயலலிதா மரணம் தொடர்பாக 4 சாட்சிகளிடம் மட்டுமே விசாரிக்க வேண்டி உள்ளது: உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, 4 சாட்சிகளிடம் மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 4 சாட்சிகளிடம் மட்டுமே விசாரிக்க வேண்டி உள்ளது: உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்...

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகுவதிலிருந்து விலக்கு கோரி அப்பல்லோ நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனுவும், அந்த ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த மனுவும் உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முக்கிய சில வழக்குகளை விசாரிக்க வேண்டியிருப்பதால், அடுத்த வாரத்திற்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் கூறினர்.

ஆனால் இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் விசாரிக்காமலேயே வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.

மேலும் தங்கள் தரப்பில் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்க வேண்டி உள்ள நிலையில், இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், தங்களால் மேற்கொண்டு விசாரிக்க முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்று பதிலளித்த நீதிபதிகள், வழக்கை அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம்  விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்தனர்.