’ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூற வேண்டும்” என்று கூறிய முதலமைச்சர் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் உருக்கம்!

ஒவ்வொருவரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினால் தான், தன்னை தானே தேற்றிக் கொள்ள முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

’ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூற வேண்டும்” என்று கூறிய முதலமைச்சர் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்  உருக்கம்!

தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்து குறித்து பேரவையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விபத்து சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் தன்னையும், அதிகாரிகளையும் சம்ப இடத்திற்கு விரைந்து செல்ல முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறினார்.

இதனையடுத்து எங்களுடன் தொடர்பில் இருந்த முதலமைச்சர் சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து, நிவாரணத்தை அறிவித்த பின்பு சம்பவ இடத்திற்கு வருவதாக தெரிவித்ததாகவும் கூறினார்.மேலும், மருத்துவமனைக்கு வந்தால் போதும் என்று தெரிவித்தேன் ஆனால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உயிரிழந்த ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று ஆறுதல் தெரிவித்தால் தான் தன்னை தானே தேற்றிக்கொள்ளமுடியும் என்று முதலமைச்சர் என்னிடம் கூறியதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தொடர்ந்து உருக்கமாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர் விபத்து நடந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்தவரும், ஒன்றிய கவுன்சிலர் பாஜகவை சேர்ந்தவர்களும் இந்த நிகழ்வில் அரசியல் பார்க்காமல் இணைந்து செயல்பட்டதாகவும், முதலமைச்சர் பேரவையில் கூறுவது போல் நமது அரசு என்பது களத்தில் பிரதிபலித்தது என்று கூறிய அவர், அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.