பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சிகள் கூட்டம் : புறக்கணிக்குமா ஆம்ஆத்மி?

பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சிகள் கூட்டம்  :  புறக்கணிக்குமா  ஆம்ஆத்மி?

எதிர்கட்சிகள் ஆலோசனை  கூட்டத்தில் பங்கேற்க மம்தாபானர்ஜி, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் பீகார் சென்றடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பாட்னா புறப்பட்டு சென்றார்.


2024 மக்களவைத் தேர்தல் நடைபெற 10 மாதங்களே உள்ள நிலையில், பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்தார். இதுதொடர்பாக துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்து தமிழ்நாடு,கேரளா  மேற்குவங்கம், டெல்லி உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். 

தொடர்ந்து, அனைத்து எதிர்கட்சிகளின் தலைவர்களும் 23ம் தேதி பாட்னாவில் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  அதன் படி நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்  காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், ஜேடியு, NCP உள்ளிட்ட 17 முக்கிய எதிர்கட்சிகள் பங்கேற்கின்றன. இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில்  பாஜகவை  வீழ்த்த முக்கிய வியூகங்கள் வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி ஆகியோர்  தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா பானர்ஜி, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் பீகார் சென்றடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பாட்னா புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர்கள் வாழ்த்தி வழி அனுப்பி  வைத்தனர்.

இதையும் படிக்க   | முன்னாள் தலைமை செயலாளர் பி.சபாநாயகம் காலமானார்...!

இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே,  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அகிலேஷ் யாதவ்  உள்ளிட்ட பல்வேறு  எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளதால்  கூட்டம் நடைபெறும் வளாகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பின்னர், பாட்னா சென்றடைந்தபின் முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் இல்லத்திற்குச் சென்று, அவரது மகனான துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்,   மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ரப்ரி தேவி ஆகியோரையும் மம்தா பானர்ஜி சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளும் பாஜகவை எதிர்த்து ஒரு குடும்பம்போல் செயல்படுவோம் எனவும் கூறினார்.

டெல்லியில் அதிகாரிகளின் நியமனத்தில் தலையிடும் மத்திய அரசின் அவசர சட்டத்தை எதிர்க்க காங்கிரஸ் ஆதரவளிக்கவில்லை எனில், கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பகுஜன் சமாஜ்  கட்சி தலைவர்  மாயாவதியும் எதிர்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிக்க   | தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர், டிஜிபி யார்? டெல்லிக்கு பறந்த அதிகாரிகள்!