உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு... வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்...

கோவில் அன்னதான திட்டத்தில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு... வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்...
கொரோனா நிவாரணத்திற்காக, கோவில் அன்னதான திட்டங்களின் மூலம் உணவு பொட்டலங்களை வழங்குவது தொடர்பாகவும், நிதி வழங்குவது தொடர்பாகவும் கடந்த மே 27 ம் தேதி தமிழக அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டது.
 
இதை எதிர்த்து ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
அந்த மனுவில், தமிழக அறநிலையத் துறையின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட சமுதாயத்துக்கு உதவ வழிபாட்டு தலங்களும், பல்வேறு மத அமைப்புகளும் முன்வந்துள்ளது மனதை ஈர்க்கும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டு, தமிழக அரசின் அறிவிப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
மனுதாரர் எந்த மதத்தை பின்பற்றுபவராக இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோல வழக்கு தொடர மாட்டார் என நம்புவதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.