தமிழகத்தில் நிரம்பி வழியும் நீர்நிலைகள்... மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்...

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நிரம்பி வழியும் நீர்நிலைகள்... மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள்...

சேலம் மாவட்டம் எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சரபங்கா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு சரபங்கா ஆற்றையொட்டி உள்ள வெள்ளாளபுரம் ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர், அருகில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. 5 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விட்டது. மேலும் தண்ணீர் சூழ்ந்து, அந்த குடியிருப்பு பகுதியே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள், வெள்ளாளபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதனிடையே, வெள்ளாளபுரம் ஏரி நிரம்பி வழியும் காட்சியை, அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள கடனாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. உச்ச நீர்மட்டம் 85 அடி கொண்ட கடனாநதி அணை, தற்போது 83 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரக்கூடிய உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அணையில் உள்ள 7 மதகுகளில் 3 மதகுகள் திறக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 9-வது முறையாக நேற்று முன்தினம் இரவு ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் பல தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் கிருஷ்ணாபுரம் அணை, 24 மணி நேரத்தில் மீண்டும் தமது கொள்ளளவை எட்டியது. இதையடுத்து கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 10-வது முறையாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் யாரும் தரை பாலத்தை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தரைப்பாலங்களின் இருபுறமும் வருவாய் துறையினரும், போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.