பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்...!

சென்னையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டதை வாபஸ் பெற்றுள்ளனர்.  

பணிநியமனம் மற்றும் மறு நியமனத் தேர்வை ரத்த செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 11 நாட்களாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் முதன்மை செயலாளருடன் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும், கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். இதனை ஏற்க மறுத்து ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிக்க : திமுக எம்.பி. வீட்டில் ஐடி ரெய்டு!

இந்நிலையில், இன்று காலை ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக  கைது செய்து, திருமண மண்டபம் மற்றும் சமுதாயக் கூடங்களில் அடைத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட தங்களை காவல் துறை அராஜக முறையில் கைது செய்தாக கூறி, ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டும் குறைந்தபட்ச கோரிக்கையை கூட நிறைவேற்றாததாலும், ஆசிரியர்கள் பலரும் வலுவிழந்ததாலும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத் தலைவர் ஜேசுராஜா அறிவித்தார். அதே நேரம் இடை நிலை ஆசிரியர்கள் மற்றும் டெட் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர்.