கருப்பு துணியால் மூடப்பட்ட பென்னிகுவிக் சிலை - கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த ஈபிஎஸ்!

கருப்பு துணியால் மூடப்பட்ட பென்னிகுவிக் சிலை - கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த ஈபிஎஸ்!

லண்டனில் பென்னி குவிக் சிலை சேதமடைந்து கருப்பு துணியால் மூடப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக்கிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் லண்டனில் சிலை திறந்து வைக்கப்பட்டது. தற்போது இந்த சிலை சேதமடைந்து கருப்புத் துணியால் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். 

இதற்கு பதிலளித்துப் பேசிய செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 15ஆம் தேதி பென்னி குவிக்கின் பிறந்தநாள் அன்று அவர் பிறந்த ஊரிலே சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டதாகவும், அதன் அடிப்படையில் தான், செய்தி துறையின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து கற்சிலையாக நிறுவுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

இதையும் படிக்க : ஆர்.எஸ்.பாரதிக்கு 48 மணி நேரம் அவகாசம்...விளக்கம் அளிக்காவிட்டால்...அண்ணாமலை பரபரப்பு அறிக்கை!

அதற்கான அரசாணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், சிலைக்காக 10 லட்சத்து 65 ஆயிரம் நிதியும் ஒதுக்கப்பட்டது. பின்னர், அதை நிறுவுவது வெளிநாடு என்பதனால் செலவுக்காக கூடுதலாய் ரூ. 23 லட்சம் என நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டு அந்த சிலையை அங்கேயே நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது.  

ஆனால், திட்டமிட்ட செலவை விட கூடுதலாக செலவானதால் அது சம்பந்தமாக நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து முதலமைச்சரோடு கலந்து பேசி நிதி அனுப்ப நிச்சயமாக இந்த அரசு பரிசீலிக்கும் என்று கூறினார். 

அதே நேரத்தில் சிலை கருப்பு துணியால் மூடப்பட்ட  தகவல் வந்தவுடன் உரிய   நடவடிக்கை மேற்கொண்டு துணி அகற்றப்பட்டதாகவும், சிலை நல்ல நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.