பூந்தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் கைது.! 

பூந்தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள் கைது.! 

தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து கள்ளச்சாராய ஊரல் மற்றும் உற்பத்தி செய்து வைத்திருந்த கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர்.    

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுளம் மற்றும் கீழ் அம்மனூர் ஆகிய இரண்டு கிராமங்களிலுள்ள செய்யாறு படுகை அருகே ஜூலை 13-ஆம் தேதி விவசாயிகள் இருவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயம் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

மேலும் இந்த ரகசிய தகவலின் அடிப்படையில சம்பவ இடத்திற்கு செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மலர் மற்றும் காவலர்கள் முருகானந்தம், சாம்பசிவம், ஏழுமலை, பூங்காவனம், குரு, திலகா ஆகியோர்கள் உள்ளடங்கிய குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது கள்ளச்சாராயம் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து விவசாய நிலத்தில் இரண்டு விவசாயிகள் கள்ளச்சாராய ஊரல் மற்றும் உற்பத்தி செய்து வைத்திருந்த கள்ளச்சாராயத்தை கையும் களவுமாக கைப்பற்றி இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு விவசாயிகளையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.  

பின்னர் கைது செய்த இரண்டு விவசாயிகளையும் மற்றும் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்து செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் கொட்டகுளம் கிராமத்தை சேர்ந்த உட்டில் மகன் ஜெயராமன் வயது-55 மற்றும் கீழ் அம்மனூர் கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் பூமிநாதன் வயது-45 ஆகிய இருவரும் இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பூந்தோட்டம் மற்றும் முட்புதர்களில் தொடர்ந்து கள்ளச்சாராயம் உற்பத்தி செய்து கள்ளச்சந்தையில் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி அவர்களின் உத்தரவின்பேரில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள். மேலும் சுற்றுப் பகுதிகளில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் பலர் பிடிபடுவார்கள் என மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.