கிராமசபை கூட்டங்களை புறக்கணித்த பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

கிராம சபை கூட்டம் 

ஊராட்சி மன்றங்களில் ஆண்டு தோறும் இந்திய குடியரசு தினம் ஜனவரி 26 உலக நீர் நாள் மார்ச் 22 தொழிலாளர் தினம் மே 1 சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 காந்தி பிறந்த நாள்  அக்டோபர் 2 மற்றும் நவம்பர் 1 உள்ளாட்சி நாள் ஆகிய தினங்களில் கிராம சபை கூட்டடம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டங்களில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கணக்குகளை தணிக்கை செய்வதும், கிராமத்தின் முக்கிய முடிவுகளையும் தீர்மானங்களையும் நிறைவேற்றுவதும் ஆகியவை நடத்தப்படுகின்றன. 

இன்று காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் நாள் என்பதால் இன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சில கிராமங்களை சேர்ந்த மக்கள் கிராம சபை கூட்டங்களை புறக்கணித்துள்ளனர். 

விமான நிலைய எதிர்ப்பு 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் கிராம சபையை புறக்கணித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.ஐ.டி குழுவின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கிராம சபை கூட்டத்தை அவர்கள் புறக்கணித்தனர். 

நிலக்கரி சுரங்க எதிர்ப்பு

இதே போல், நெய்வேலி என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தாழை ஊராட்சி மக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர். ஊராட்சித் துறை அதிகாரிகள் வந்து பலமணி நேரம் ஆகியும், கூட்டத்திற்கு கிராம மக்கள் வராததால் அதிகாரிகள் எழுந்து சென்றனர்.  

சாலை மறியல் 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கருவம்பாக்கம் பகுதியில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர். இதுவரை தங்கள் ஊராட்சிக்கு மயான பாதை, சாலை உள்பட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராததை கண்டித்து அவர்கள் புறக்கணிப்பு செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி  அருகே பந்துவக்கோட்டை கிராமத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக குடிநீர் பிரச்னை இருந்து வருவதை கண்டித்து, கிராம சபைக் கூட்டத்தை மக்கள் புறக்கணித்தனர். மேலும், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூரில் தகராறு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த கிராம சபைக் கூட்டத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏரி கொடி பகுதியில் வளர்க்கப்படும் பன்றிகளால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் வேறு ஒரு இடத்திற்கு மாற்றக்கோரி ஏரியூர் பகுதியை சேர்ந்த இளைஞர் மாரியப்பன் மனு அளித்தார். ஆனால், மனுவிற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கிராம சபைக் கூட்டத்தில், தன் மீது டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். 

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி  ஒன்றியம் சுந்தரம்பள்ளி ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் கடும் மோதல் ஏற்பட்டது. அட்டவணைப் பிரிவு மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக ஐக்கிய ஜனநாயக  கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் அதே  பகுதியை சேர்ந்த 17வயது சிறுவனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதையும் படிக்க || "எதிர்கட்சியாய இருந்தால் இரயில் மறியல்; ஆளும் கட்சியானால் கூட்டுப்பொறியல்" திமுக மீது சீமான் காட்டம்!