மலர் கண்காட்சியின் இறுதி நாள்...கூடிய திரளான பொதுமக்கள்!

மலர் கண்காட்சியின் இறுதி நாள்...கூடிய திரளான பொதுமக்கள்!

சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்ற மலர் கண்காட்சியின் இறுதி நாளில் திரளான பொதுமக்கள் பல்வேறு வகையான மலர்களை ஆர்வமுடன் கண்டு களித்தனர். 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கோபாலபுரம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் ஜூன் 3-ஆம் தேதி மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது. இதற்காக பெங்களூரு, உதகை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மலர்கள் இங்கு காட்சி படுத்தப்பட்டிருந்தன. உதகைக்கு அடுத்தபடியாக சென்னையில் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியை பள்ளி மாணவ - மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

இதையும் படிக்க : கோடை தாகத்தை தீர்த்த கனமழை...மகிழ்ச்சியில் மக்கள்...!

காலை 9 மணிமுதல் இரவு 8 மணி வரை பூங்காவை கண்டு களிக்க அனுமதி வழங்கப்பட்டது. பூங்காவை பார்வையிட மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல், கேமராவுக்கு 50 ரூபாயும், வீடியோ எடுக்க நூறு ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இன்று மலர் கண்காட்சியின் இறுதி நாள் என்பதால் திரளான பொதுமக்கள் பல்வேறு வகையான மலர்களை ஆர்வமுடன் கண்டு களித்தனர். தோட்டக் கலைத்துறை சார்பில் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.