30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை; அவதிப்படும் பொதுமக்கள்!

30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை; அவதிப்படும் பொதுமக்கள்!

சேலம்: சேலம் அருகே 30 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டில் பாட்டப்பன் கோயில் தெரு அமைந்துள்ளது. இங்கு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 141 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 33 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் இப்பகுதியில் குடியிருக்க நிலம் வழங்கிய அரசு, அதற்குரிய பட்டா ஏதும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பேரூராட்சி நிர்வாகத்தால் கிடைக்க வேண்டிய சாலை வசதி, அடிகால் வசதி, குடிநீர் வசதி என எந்தவொரு அடிப்படை வசதியும் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே பட்டா கேட்டு இப்பகுதி பொதுமக்கள் வாழப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற முதல்வர் நிகழ்ச்சியில் கண் துடைப்பாக 25 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

அனைத்து குடியிருப்பு தாரர்களுக்கும் முறையாக பட்டா கிடைத்தால் மட்டுமே பேரூராட்சி நிர்வாகம் மூலம் அனைத்து அடிப்படை வசதிகளும் தங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கும் அப்பகுதி பொதுமக்கள் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.