யோவ் ஈ.பி..... போட்டு விடுயா!:  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் போராட்டம்

யோவ் ஈ.பி..... போட்டு விடுயா!:  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் போராட்டம்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்,  மின்சாரம் இல்லாததால், அப்பகுதி மக்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில், இரவு 8 மணி முதல் மின்சாரம் இல்லாததால் இரவில் குழந்தைகள், சிறுவர்கள் உறங்க முடியாமல் கொசுக்கடியில் அவதிப்படுவதாக கூறி, மின் வாரிய ஊழியர்களை கண்டித்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் சிக்னலில் அப்பகுதி மக்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வரக்கூடிய வாகனமும், சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லக்கூடிய எந்த ஒரு வாகனமும் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் அவதி. 

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பபடுவதாகவும், மின்வாரிய அதிகாரிகள் கண்டும் காணாமல் அலட்சியமாக இருப்பதாக கூறி பனையூர் பகுதி மக்கள் நள்ளிரவு 1 மணியளவில் ஈசிஆர் இரு வழி சாலையையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்த தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு தலைமையில் கானத்தூர் போலீசார் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது போராட்டக்காரர்கள் ஆய்வாளர் வேலுவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

மின்சாரம் வழங்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று உறுதியாக இருந்த மக்களிடம் ஆய்வாளர் வேலு தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு இணைங்கி சுமார் 1.5 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். 

நாளையும் இதே நிலை நீடித்தால் பெரியளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி மக்கள் கலைந்து சென்றனர். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரமாக பொதுமக்கள் மின்சாரம் இல்லாததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.